லண்டனில் 3 இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்- 6 பேர் பலி; 20 பேர் படுகாயம்

லண்டன் மாநகரில் பாதசாரிகளை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். லண்டன் நகரின் மத்திய பகுதியில் பாலம் ஒன்றில் நேற்று இரவு பாதசாரிகளை குறிவைத்து வாகனம் ஒன்று தாறுமாறாக பலமுறை மோதியது. இதில் பாதசாரிகள் பலரும் தூக்கியடிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பாரோ மார்க்கெட், வாக்ஸ்ஹால் பகுதிகளில் வேனில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு பொதுமக்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவங்களில் இதுவரை மொத்தம் 6 பேர் பலியாகி உள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் இத்தாக்குதலை நடத்திய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதியன்று வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தின் மீது மோதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைப் போல மீண்டும் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, இது ஒரு பயங்கரவாத தாக்குதலே என கண்டனம் தெரிவித்துள்ளார்.